வீரவணக்கம்!
அது என்னுடைய ஆரம்பகால ரயில் பிரயாணங்களில் ஒன்று.
அப்பொழுது நான் 5 வயதுச் சிறுவன்.
பங்களூரிலிருந்து பூனாவுக்கு ரயிலில் என் பெற்றோர்களோடு பயணமாகிக் கொண்டிருந்தேன்.
’நீராவி எஞ்ஜின் மாட்டிய அந்த ரயில் புகைமேகங்களைக் கக்கியபடி உற்சாக மாகப் போய்க்கொண்டிருந்தது.
ஜன்னல் வழியாகப் பார்த்தபடி ஆனந்தமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன் நான்.
நான் கண்ட இயற்கைக்காட்சிகள் என் மனதைக் கொள்ளை கொண்டன.
மாடுகளும் ஆடுகளும் புல்மேய்ந்துகொண்டிருந்தன _
பெண்கள் தலையில் மண்குடங்களோடு தங்கள் குடில்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்;
தொலைவில் கண்ட பிரம்மாண்டமான மலைகள், அவ்வப்போது, சீரான இடைவெளிகளில் ரயிலைக் கடந்துசென்ற மின்கம்பங்கள் _
சமயங்களில் அவற்றைப் பார்த்து எனக்கு வியப்பு மேலிடும்; குழப்பமுண்டாகும்,
யார் நகர்ந்துகொண்டிருப்பது - நானா இல்லை அந்த மின்கம்பங்களா!
ரயில்பெட்டிக்குள் , அங்கிருந்த ஒரேயொரு ராணுவ வீரன் என் கவனத்தைக் கவர்ந்தார்.
அவருடைய நடை, தோள் நிமிர்த்தி கம்பீரமாக அவர் அமர்ந்திருந்த தோற்றம், ஒரு தேர்ந்த பயிற்சி பெற்ற உடலை எடுத்துக்காட்டியது!
பயணத்தில் எல்லாமே சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த போது, திடுமென ரயில் கிறீச்ச்சிட்டபடி நின்றுவிட்டது!
முதலில் அவசர உதவிக்கான சங்கிலியை யாரோ பிடித்திழுத்திருப் பார்கள் என்று தான் எல்லோரும் நினைத்தோம்;
பிறகு, அந்த ராணுவ வீரர் பிரச்னை என்னவென்று பார்த்துவிட்டு வர வண்டியை விட்டு வெளியே இறங்கிச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து அந்த சோகமான செய்தியோடு திரும்பினார்.
ரயில் அதற்குமேல் செல்லாது என்றார்.
ரயிலின் ‘கார்டு’ம் வந்து அந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.அதன் பிறகு அந்த அதிர்ச்சிச் செய்தி வந்தது;
தண்டவாளங்களில் ஏதோ சேதம் ஏற்பட்டிருப்பதால் பூனாவிலிருந்து பங்களூரு வந்துகொண்டிருந்த ரயிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாம்.
பயணிகள் இதே வண்டியில் பயணமாக முடியாதென்று கூறப்பட்டது. அவர்கள் இறங்கி எதிர்ப்பக்கம் சென்று அங்கிருந்த ரயிலில் ஏறிக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!
நான் சொல்வது 40களில் நடந்தது. அப்பொழுதெல்லாம் ஒற்றை இருப்புப் பாதை வழி மட்டுமே இருந்தது!
இன்றைய நிலவரப்படி அந்த நிகழ்வைப் பார்த்தால், இது ஒரு அபத்தமான முடிவாகத் தோன்றலாம். ஆனால், அன்று அதைத்தான் செய்தாக வேண்டியிருந்தது.
எங்களிடம் எக்கச்சக்கமான மூட்டை முடுச்சுகள் இருந்ததால் என் அம்மா வுக்கு மிகவும் கவலையாகிவிட்டது.
இந்த மூட்டைமுடிச்சுகளையெல்லாம் எப்படி எடுத்துச் சென்று எதிர்ப்பக்கம் இருந்த ரயிலில் ஏற்றப்போகிறோம் என்று திகைத்துப்போயிருந்தார் அம்மா.
வழக்கம்போல், எங்கள் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டுபொனார்கள்.
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது!
அந்த ராணுவ வீரர் [அவருடைய பெயர் ஜக்தீஷ் என்று பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது] எங்களுக்கு உதவி செய்வதற்காக எங்களை நோக்கி வந்தார்.
முதலில் போய் எங்களுக்குத் தேவையான இருக்கைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்வதற்காய் தன்னோடு எதிர்பக்கமிருந்த ரயிலுக்கு வரும்படி என்னுடைய அப்பாவை அழைத்தார்.
எங்களுடைய மூட்டைமுடிச்சுகளில் சிலவற்றைக் கைகளில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அப்படி நான்கைந்து முறை இந்த ரயிலுக்கும் அந்த ரயிலுக்குமாய் எங்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்துகொண்டு போய்வந்தார் அவர்.
இறுதியாக, என்னையும் என் அம்மாவையும் எதிர்ப்பக்கமிருந்த ரயிலுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.
மனம் நெகிழ அவருடைய உதவிகளுக்குத் திரும்பத்திரும்ப நன்றி தெரிவித் தோம்.
ஒரு புன்னகையோடு ‘தன்னுடைய நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பணிசெய்வது தன் கடமை என்ரு கூறினார் அவர்.
நாங்கள் பூனாவை அடைந்தவுடன், அங்கிருந்து பம்பாய்க்குச் செல்லும் இணைப்பு ரயிலில் நாங்கள் ஏறிக்கொள்ள உதவினார் அந்த ராணுவ வீரர்.
பின், கனிவோடு கையசைத்து எங்களிடம் விடைபெற்றுக்கொண்டார்.
தன் வழியே நடந்துசென்றார்.
அதற்குப் பிறகு நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை!
அதற்குப் பின், பல வருடங்கள் கழித்து,
அந்த மகத்தான மனிதரின் ஞாபகார்த்தமாய்
தன்னுடைய முதல் பேரனுக்கு
ஜக்தீஷ் என்று பெயர்சூட்டினாள் என் அம்மா!.
வெங்கடேஷ்
No comments:
Post a Comment