மஹாவிஷ்ணுவுக்கும்
யமராஜனுக்கும்
இடையே
ஒரு கற்பனை உரையாடல்!
விஷ்ணு: வாருங்கள் யமராஜனே, நான் தான் உங்களை வரச்சொல்லி ஆளனுப்பிவைத்தேன். சமீபகாலமாக பிரபஞ்சத்திலிருந்து உங்களைப் பற்றி நிறைய புகார்கள் வந்தவண்ணமிருக்கின்றன. குறிப்பாக, பூமியிலிருந்து.
யமராஜன்: இந்திய நாட்டிலி ருந்துதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
விஷ்ணு:நீங்கள் சொல்வது சரிதான். அங்கே என்ன பிரச்னை? ஏதேனும் உங்கள் மனதை பாரமாக அழுத்திக்கொண்டிருக்கிறதா? அங்கே பணிசெய் வது கடினமாக இருக்கிறதா? எதுவானாலும் கூறுங்கள் யமராஜனே. இதோ, இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ராஜஸ்தானில் இருப்பவர் இந்த புருஷோத்தம் ரஞ்சோடாஸ். கடந்த இரண்டு வருடங்களாக தன்னை பூமியி லிருந்து அழைத்துச்சென்றுவிடும்படி அவர் உங்களிடம் மன்றாடிக்கொண்டி ருக்கிறார். ஆனால், நீங்கள் அவருடைய வேண்டுகோளுக்கு இன்னமும் செவி சாய்க்கவேயில்லை!
யமராஜன்:இறைவா, எனக்கு இந்த மனிதரை நன்றாகவே தெரியும். அவரை அழைத்துவர நான் தயாராகச் செல்லும்போதெல்லாம் இந்த மனித ருடைய பிள்ளைகள் அவருக்கு ஏதோ ஊசி போட்டு அவரை உயிரோடு இருக் கச்செய்துவிடுகிறார்கள்!
விஷ்ணு: ஓ அப்படியா, அது எனக்குத் தெரியாது; ஆனால், எதற்காக அப்படிச் செய்கிறார்கள்?
யமராஜன்: இறைவா, இந்த மனிதர் மிகவும் பணக்காரர். அவருடைய சொத்துகள் தங்களுக்கு வந்துவிட்டால் நிறைய வரி கட்ட வேண்டிவருமே என்ற கவலை அவருடைய பிள்ளைகளுக்கு. ஏற்கனவே வரி ஏய்ப்பு விஷயத் தில் அவர்களை அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
விஷ்ணு: அடடா, அப்படியா விஷயம், அது சரி, இதோ கோவாவைச் சேர்ந்த இந்த ஸோனாத்ரி ராவ், அவர் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் அவரை கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக எடுத்துச்சென்றுவிட்டதாகப் புகார் செய்கிறார். இதற்கு நீங்கள் என்ன விளக்கம் தருவீர்கள்?
யமராஜன்: இறைவா, இங்கே நிலைமை தலைகீழ். பரிதாபத்திற் குரிய இந்த மனிதருக்கு அவருடைய பிள்ளைகளே ஏதோ கடுமையான மருந் தைக் கொடுத்து, அவரை நினைவிழக்கச் செய்து, அவர் இறந்துவிட்டதாக மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெற்றுக்கொண்டு அவருடைய உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள். நல்லவேளையாக, அவருடைய உடலில் தீவைப்பதற்கு முன் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது!
விஷ்ணு: என்ன கொடுமை..... ஏன் அப்படிச் செய்தார்கள் யமராஜனே??
யமராஜன்:எல்லாம் அவருடைய சொத்தை அபகரித்துக்கொள்வதற்குத் தான்!
விஷ்ணு: மூன்றாவதாக ஒரு விஷயமும் இருக்கிறது. இதில், பிரம்மா வின் அதிகாரத்தையே நீங்கள் கைப்பற்றிக்கொள்வதுபோல் தோன்றுகிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த பட்டுக்கொடி வேலம்மாள் அவள் பிறப்பதற்கு முன்பே நீங்கள் அவளை எடுத்துக்கொண்டுபோய் விட்டதாகப் புகார் செய்கி றாள். இப்படியெல்லாம் நீங்கள் செய்யலாகாது யமராஜனே!
யமராஜன்: அதுவா, இதெல்லாம் இந்திய கிராமங்களில் வெகு சகஜம் இறைவா. பிறக்கப்போவது பெண்குழந்தை தான் என்று தெரிந்தால் கருவி லேயே அந்தக் குழந்தை அழிக்கப்பட்டுவிடுகிறது. வளர்ந்தால் பெண்ணுக்குத் திருமணம் செய்யவேண்டும் அதற்கு நிறைய வரதட்சணை கொடுக்கவேண் டுமே.
விஷ்ணு: அடக் கடவுளே! நீங்கள் குறிப்பிடும் உலகின் அந்தப் பகுதி யின் கதி என்னாவது?
யமராஜன்: இனியும் நீங்கள் தாமதிக்கக் கூடாது இறைவா. நீங்கள் இன்னொரு அவதாரம் எடுத்து பூமிக்குச் சென்றேயாக வேண்டும்.
ஜி.வெங்கடேஷ்
No comments:
Post a Comment