LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Friday 12 December 2014

பணம் பணம் பணம் பணம் பணம்

பணம் பணம் பணம் பணம் பணம் 

நம் எல்லோருக்குமே பணம் தேவையாயிருக்கிறது. நாம் எல்லோருமே பணத்தை மிகவும் விரும்புகிறோம்.  

கணக்கேயில்லாமல் எக்கச்சக்கமாய் பணம் நம் கையில் புரளவேண்டும் என்று தான் நாம் எல்லோருமே எப்பொழுதுமே விரும்புவோம்.


ஆனால், பணம் கையில் அதிகமாக இருந்தால் என்னவெல்லாம் பிரச்னைகள் ஏற்படும், அதனால் ஏற்படக்கூடிய தலைவலி, மனவலி எல்லாம் எத்தனை பயங்கரமானவை என்பதை நாம் உணர மறுக்கிறோம்!! 


குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டைச் சேர்ந்த ’சாந்திலால் பப்பட்’டும் இதற்கு விதிவிலக்கல்ல. 

திரு பப்பட் ஒரு சிறிய வர்த்தகர்;


அவருக்கு ஒரு சிறிய குடும்பம் இருந்தது;


அவர் மனைவிக்கு பயந்தவர். அவருடைய மனைவி அவர் அற்பசொற்பமாக சம்பாதிக்கிறார் என்று அவரை எப்பொழுதும் ஏசிக்கொண்டிருப்பாள்.
கிடைக்கும் பணம் அவருடைய குடும்பத்தின் தினசரித் தேவைகளை மட்டுமே ஓரளவுக்கு நிறைவேற்றிக்கொண்டிருந்தது.   

ஆனால், சாந்திலால் ஒரு பக்தி மிக்க இந்து;  


தினமும் அவர் கடவுளிடம்  - அது லஷ்மியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! - தன்னுடைய நிதி நிலைமையை மேம்படுத்தும்படி மனமுருக வேண்டிப் பிரார்த்திப்பது வழக்கம்.


அந்தப் பெண் கடவுளும் அவருடைய பிரார்த்தனைகளுக்கு ஒரு நாள் நல்ல பதிலைத் தந்தார்; 


அவர் எதிரில் காட்சி தந்த மகாலஷ்மி எத்தனை செல்வம் இருந்தால் அவருக்கு மனநிறைவு ஏற்படும் என்று கேட்டார்.

சாந்திலால் உடனே “ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் கடவுளே”, என்று பதிலளித்தார்.


“சரி, நாளை உன்னிடம் ஒரு கோடி ரூபாய் வந்து சேரும்”, என்ற மகாலஷ்மி, “ ஆனால், ஒரு நிபந்தனை; இந்தப் பணத்தை சரியாக ஒரு வருடம்  கழித்து என்னுடைய தூதுவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். நீ ஒரு வர்த்தகர் என்று எனக்குத் தெரியும் சாந்திலால்.... எனவே இப்பொழுது தரப்படும் பணத்தை அதிகமாகப் பெருக்க உனக்கு ஒரு வருட காலம் அவகாசம் இருக்கிறது,” என்றார்.

சொன்னதுபோல், அடுத்த நாளே சாந்திலால் கைக்கு அந்தப் பணம் வந்தது.

அவர் தன்னுடைய மனைவியிடம் அந்த நல்ல செய்தியைக் கூறினார்.


"”கோகிலா பென்’ என்று அன்போடு கூப்பிட்டார் அவர். “அடுத்த வருடம் நீ என்னுடைய ராணியாக இருப்பாய்! உன்னைச் சுற்றி வைரம், வைடூரியம், முத்து பவழம் எல்லாம் குவிந்து கிடக்கும்! விலையுயர்ந்த பனாரஸ் பட்டை அணிந்துகொண்டிருப்பாய்! கோகிலா, சற்று பொறுத்திருந்து பார்!” என்று உற்சாகமாய் கூறினார்.


அன்று மாலை, தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக பூங்காவுக்குச் சென்றார் அவர். நண்பர்கள் குழுவிலிருந்த நஸீக் “சாந்தியின் முகம் முழுக்கச் சிரிப்பு! காரணம் என்னவோ!” என்றார்.


“இன்றைக்கு என்ன இத்தனை மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள்?  கோகிலா இனிப்புப் பண்டம் செய்து தந்தாரா?” என்று தொடர்ந்து கேட்டார்.


”அதெல்லாம் ஒன்றுமில்லை,” என்ற சாந்திலால் தன் நண்பர்களிடம் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.


”அத்தனை பணம் உங்களுக்கு யார் தந்தது? சொல்லுங்கள், யார் தந்தது?” என்று அவருடைய நண்பர்கள் குழு ஒருமித்த குரலில் கேட்டது.

"இல்லை, அதை நான் கூறவியலாது,” என்று பதில் கூறிய சாந்திலால், “ ஆனால், கிடைத்துள்ள கால அவகாசம் மிகவும் குறைவு.எனவே ,நான் விரைவாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்”, என்றார்.


“நல்லது, எனக்கு ஒன்று தோன்றுகிறது.சொல்லட்டுமா? எனக்கு ஒரு கட்டிடம் கட்டி விற்கும் முதலாளியைத் தெரியும். கஞ்ஜூர் மார்க் பகுதியில் அவர் 50 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பை நிர்மாணித்துக்கொண்டிருக் கிறார். அங்கே உங்கள் குழந்தைகளுக்கு 15 லட்சம் பெறும் இரண்டு வீடுகளை வாங்க நீங்கள் முன்பதிவு செய்துவிடுங்கள். காலதாமதம் செய்யாதீர்கள். தினச்மும்விலை கூடிக்கொண்டே போகிறது!”


"எனக்கு அந்த விஷயம் தெரியும். நிச்சயமாக நான் அதை கவனத்தில் கொள்கிறேன்”, என்றார் சாந்திலால்.

அந்தக் குழுவிலிருந்த ப்ரவீன் {பங்குச்சந்தைத் தரகர்), “இப்போதைய சூழலில் நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதே மேலானது. செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களிடம் பணம் இருப்பதால் நீங்கள் பங்குகளில் முதலீடு செய்வதற்காக பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கலாம்”, என்றார்.


"கண்டிப்பாக அப்படியே செய்கிறேன்", என்று பதிலளித்தார் சாந்திலால்.  

அந்தக் குழுவிலிருந்த ப்ரமோத் தங்கத்தில் பணத்தை முதலீடு செய்யும்படி ஆலோசனை கூறினார். “அது மிகவும் பாதுகாப்பானது. தங்கத்தின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது. இந்த முதலீட்டுக்கு பத்து லட்சம் ஒதுக்கிவைத்தால் நல்லது. நன்றாக யோசித்துப் பாருங்கள்,” என்றான்.


"சரி சரி - அப்படியே செய்கிறேன்”, என்றார் சாந்திலால். அப்போதே 50 லட்சங்களை நல்லபடியாக முதலீடு செய்ய சரியான வழிவகைகளைக் கண்டுகொண்ட மகிழ்ச்சி அவர் மனதில் நிறைந்தது.

வீடு திரும்பியதும் தன்னுடைய நண்பர்களோடு தான் உரையாடிக்கொண்டிருந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.


“இனி நான் மீதமுள்ள 50 லட்சங்களை மட்டுமே நல்லவிதமாகப் பாதுகாக்க வேண்டும்”, என்றார்.       

”இல்லை, மீதி 20 லட்சம் மட்டுமே இருக்கும்”, என்று கூறினாள் அவருடைய மனைவி..

"என்ன சொல்கிறாய்? என்று கேட்டார் சாந்திலால். “ஆமாம், நீங்கள் வெளியே போயிருந்த போது என்னுடைய சகோதரிகள் மாலதியும் நளினியும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு வருடம் கழிவதற்குள் அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிடுவார்கள்.” 


"என்னைக் கேட்காமல் எதற்கு இப்படியெல்லாம் செய்கிறாய்?” என்று தன் மனைவியைக் கேட்டார் சாந்திலால்.


"அது மட்டுமல்ல”, என்று பதிலளித்த கோகிலா தொடர்ந்து, “ பிரமீளாவின் திருமணத்தையும் நான் எண்ணிப்பார்த்தாக வேண்டுமே;இன்னும் இரண்டு வருடங்களில் இன்னும் சில வருடங்களில் அவளுக்கு திருமண வயது வந்துவிடும்; அவளுக்கு நகை, நட்டு இல்லையென்றால்  யார் தான் அவளைத் திருமணம் செய்துகொள்வார்கள்? எனவே, நாங்கள் நகைக்கடைக்குச் சென்றோம். எனக்கும் இரண்டு நெக்லஸ் செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்திருக்கிறேன்."


"ஆனால் - கோகிலா, இந்த வருடம் முடிவதற்குள் நாம் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுத்தாக வேண்டும், தெரியுமா? மகாலஷ்மி நம்மிடம் தந்த தொகையைக் கொண்டு ஓரளவாவது பணம் ஈட்டிய பிறகு வாங்கியிருக்கலாமே  - கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார் சாந்திலால்.


 "நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை” என்றாள் கோகிலா. “நான் பிரமோத்துக்கும் பிரமீளாவுக்கும், ஆளுக்கொரு மோட்டார் பைக்கும், ஸ்கூட்டரும் வாங்கிக்கொள்வதற்காக தலைக்கு 5 லட்சம் தந்திருக்கிறேன்...”


"என்ன இது கோகிலா, உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன?” என்று கத்தினார் சாந்திலால். “ இத்தனை நாள்லும் அவர்கள் ‘பஸ்ஸில் தானே கல்லூரிக்குப் போய்க்க்கொண்டிருந்தார்கள்? இப்போது நீ போய் அவர்களை கெடுத்துக் குட்டிசுவராக்கியிருக்கிறாய்_”


"நம்முடைய பிள்ளைகளைப் பற்றி நமக்கு அக்கறையில்லையென்றால் பின் யார் அவர்களைப் பார்த்துக்கொள்வார்கள்?” என்று கோகிலாபென்னும் பதிலுக்குக் கூச்சலிட்டாள்.   

அடுத்த நாள் சாந்திலால் ஒரு வங்கிக்குச் சென்றார். தான் வழக்கமாக கடனுதவி பெறும் வங்கியைத் தவிர்த்து வேறொரு வங்கிக்குச் சென்றவர், அங்கிருந்த மேலாளரைப் பார்த்துப் பேசச் சென்றார்.   




"20 லட்சம் ரூபாயை ஒரு வருட கால ‘ஃபிக்ஸெட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன்”, என்றார்."  


"20 லட்சமா, என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ந்துபோய் கேட்டார் அந்த வங்கியின் மேலாளர். “கண்டிப்பாக நீங்கள் இங்கே முதலீடு செய்யலாம், சாந்திலால் அவர்களே, ஆனால், நீங்கள் புதிதாகத் திறந்துள்ள ஒரு கோவாப்பரேட்டிவ் வங்கியில் முதலீடு செய்தால் இங்கே கிடைப்பதைப் போல் இருமடங்கு வட்டி கிடைக்குமே - அங்கே பணத்தை முதலீடு செய்ய நீங்கள் விரும்பவில்லையா? வருடத்திற்கு 18% வட்டி கிடைக்கும் தெரியுமா?!”


"கண்டிப்பாக அங்கே முதலீடு செய்கிறேன்” என்றார் சாந்திலால். 


"அப்படியென்றால் வரவேற்பறையில் சற்று காத்திருங்கள்; நான் அந்த வங்கியில் ஏஜெண்ட்டை இங்கே வரச்சொல்லிக் கூப்பிடுகிறேன்.”


கண்ணிமைப்போதில் அந்த ஏஜெண்ட் அங்கே வந்துசேர்ந்தான். பணத்தை வாங்கிக்கொண்டு அதற்கான ரசீதை சாந்திலாலுக்குத் தந்தான்.  


*  *  *


சாந்திலால் முகத்தில் எக்கச்சக்கமாய் கவலை சூழ்ந்திருந்தது. காரணம், மகாலஷ்மியிடம் வாங்கிய தொகையை திருப்பிக்கொடுக்கவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.  


ஆனால் திருப்பித் தர அவனிடம் 40 லட்சங்கள் மட்டுமே இருந்தது; 


பங்குச் சந்தையிலும், பொன்னிலும் முதலீடு செய்யப்பட்டிருந்த பணம் நல்லவிதமாகவே லாபம் ஈட்டித் தந்த போதிலும், வீடு கட்டுவதில் அவன் முதலீடு செய்திருந்த பணத்தில் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது


அரசு நிலங்களில் அந்தக் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்ததால் உள்ளூர் மாநகராட்சிக் கழகம் அந்தக் கட்டிடங்களை இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கிக்கொண்டிருந்தது.


கதவை யாரோ தட்டும் ஒலி கேட்டது: “அப்பா, வருமான வரி அதிகாரிகள் வந்திருக்கிறார்கள், உங்களப் பார்க்க வேண்டுமாம்”, என்று கூறினான் ப்ரமோத்.


“நான் வீட்டில் இல்லை என்று அவர்களிடம் சொல்லிவிடு”, என்றார் சாந்திலால்.   


"நீங்கள் பேசுவது எங்களுக்கு நன்றாகவே கேட்கிறது” என்று ப்ரமோத்தை இடித்தபடியே அவனைக் கடந்து வீட்டினுள் வந்தார்கள் அந்த வருமான வரி அதிகாரிகள்.தயவு செய்து உரிய ஆவணங்களை எங்களிடம் காட்டுங்கள். அதாவது, ஒரு கோடி ரொக்கப்பணத்திற்கான ரசீதும், அதற்கான வருமான வரியை நீங்கள் கட்டிவிட்டதற்கான ரசீதும் வேண்டும்” என்று அந்த அதிகாரிகள் கூறினார்கள். 


"என்னிடம் எந்த ஆவணமும் இல்லை”, என்று எந்த உணர்ச்சியையும் வெளிபடுத்தாத முகபாவத்தோடு பதிலளித்தார் சாந்திலால். 


" சரி, சரி , எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.  சாந்திலால், பாவம் நீங்கள், வரியையும், அதற்கான அபராதத் தொகையையும் நாங்கள் தள்ளிவிடுகிறோம். ஆனால், எங்களுக்கான தேனீரைத் தாருங்களேன்!”!"


"ஹோ, தேனீர் வேண்டுமா? இதோ, உங்களுக்கென்று தனிச்சுவை மிக்க மசாலா டீயையே தருகிறேன்! கோகிலா, நம்முடைய விருந்தாளிகளுக்கு நல்ல மசாலா டீ போட்டுத் தாயேன்!”


"சாந்திலால், நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைத்தேன்; நாங்கள் குறிப்பிட்டது ரூபாய்த் தாள்களை”, என்று கையால் சைகை செய்து கூறினார்கள்.





"பணம் பணம் பணம் பணம் பணம்“ என்று அலுப்பும் சலிப்புமாய் கூறிக்கொண்டார் சாந்திலால்.



திடுமென சாந்தி லாலுக்கு முழிப்பு வந்துவிட்டது. அவருடைய வலது காதில் தண்ணீர் ஊற்றப்பட்டி ருந்தது;

"எழுந்திருங்கள் சோம்பேறி மனிதரே, எதற்கும் உதவாத ஆசாமி; சரியான உதவாக்கரை; வெளியே உங்களுடைய கடை உதவியாள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆமாம், தூக்கத்தில் ‘பணம், பணம், பணம் பணம் பணம் என்று தூக்கத்தில் என்னவோ கூச்சலிட்டுக்கொண்டிருந் தீர்களே, என்ன அது?” என்று கேட்டாள் கோகிலா.



ஜி.வெங்கடேஷ்









No comments:

Post a Comment