LIVE AND LET LIVE!

LIVE AND LET LIVE!

Wednesday, 10 June 2015

என் கணவர் தன்னிகரற்ற பரதநாட்டியக் கலைஞர் தெரியுமா!



  என் கணவர் தன்னிகரற்ற பரதநாட்டியக் கலைஞர் தெரியுமா!





 "Keeping up with the Jones" என்றால், ஒருவர் அவருடைய அண்டை அயல் வீட்டுக்காரர்கள் உறவினர்கள் ஆகியோரோடு ஒப்பிடும் அளவில் தனது சமூக அந்தஸ்தை (உலகாயுதப் பொருட்களை வாங்கிக் குவிப்பதன் மூலம்)த் தக்கவைத்துக் கொள்ளு தல். 
இப்படியாக, நம்முடைய பக்கத்துவீட்டுக் காரர்  ஏதாவ தொரு பொரு ளைப் புதிதாக வாங்கி னால்        ( இரு சக்கர வாகனம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள் வோம்) உடனே நம் மன தில் அதேபோல் வாங்க வேண்டுமென்றோ அல் லது அதைவிட மேலா னதாக வாங்கவேண்டு மென்றோ ( நாலு சக்கர வண்டி என்று வைத்துக்கொள்வோம்) ஆர்வம் பொங்கும்.


இந்த வாழ்வியல் கலை சமூகத்தின் எல்லாப் படிநிலைகளில் இருக்கும் மக்களையும் ஆட்டிப்படைக்கிறது. பணக்காரர்கள், மத்தியதர வர்க்கத்தி னர், ஏழைகள் என எல்லோருமே இந்தக் கலையை ஆர்வமாகப் பயில் கிறார்கள். நாம் இந்த மனோபாவத்தை எல்லாவிடங் களிலும் பார்த்து வருகிறோம். வீடுகளில், அலுவலகங்களில், மனமகிழ்மன்றங்களில், பூங்காக்களில் என எல்லாவிடங்களிலுமே.... எந்த உரையாடலா னாலும், அதில் இந்தக் கலையைக் காணக்கிடைக்கிறது. ஆனால், பிரம்மா இந்த குணாம்சத்தை, திறனாற்றலை நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் வழங்கியிருக்கிறார். சிலரிடத்தில் இந்த வாழ்வியல் கலை அவர்களுடைய பேச்சு, செய்கை எல்லாவற்றிலும் வெள்ளமாகப் பொங்கிப் பெருகத் தொடங்கிவிடுகிறது. ஆனால், வேறு சிலரோ கூடுதல் அறிவுஞானத்தோடு மிகவும் அத்தியாவசியமான உள்ள சந்தர்ப்பங்களில் இடங்களில் மட்டுமே இந்த வாழ்வியல் கலையில் தங்களுக்கிருக்கும் திறனாற்றல்களை வெளிப்படுத்துகிறார்கள்.

இவ்வாறாக, ஒரு மத்தியதர இல்லத்தரசி, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ‘பேடா’க்களை மகிழ்ச்சி கொப்பளிக்க விநியொகிக் கும்போது, யாரேனும் அதுகுறித்து விசாரித்தால் இப்படிக் கூறுவாள்: “ஹோ, இதுவா, என்னுடைய பிள்ளைக்குச் சென்னை ஐஐடியில் இடம் கிடைத்திருக்கிறது!”

ஆனால், அதைக்கேட்டு அவளுடைய பக்கத்துவீட்டுக்காரர்  வாயடைத் துப் போய்விடமாட்டார். ”எங்கள் சுரேஷுக்கு ஐஐடி மும்பையில் இடம் கிடைத்தது. ஆனால், எங்களுக்குத்தான் அனுப்ப விருப்பமில்லை, ஏனெனில், எங்களுக்கு அங்கே உறவினர்களோ தெரிந்தவர்களோ கிடையாது!” ஆனால், உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்கக்கூடும்

அதேபோல், ஒரு பூங்காவில், மூத்த குடிமக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் இப்படிக் கூறுவார்: “ஹோ, காலையில் நான் காபி குடிப்பதில்லை. ‘க்ரீன் டீ’ தான் குடிப்பேன். உடனே அவருடைய நண்பர், “ஓ, நான் எப்பொழுதும் பழ ஜூஸ் தான் குடிப்பேன்... அந்தந்தப் பருவத்திற்கேற்ப பழங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்”. உண்மையில் அவர்கள் தினசரி காலையில் அவர்களுக்கு சாதாரண காப்பி அல்லது தேனீர் மட்டுமே தரப்படும் என்பது வேறு விஷயம்;

அதேபோல் ஒரு இல்லத்தரசி தன்னுடைய அண்டைவீட்டுப் பெண்மணி யிடம், “தீபாவளிக்கு நான் காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கப்போகி றேன்!” என்பாள். உடனே மற்றவள், “நான் எப்பொழுதும் பனாரஸ் பட்டு தான் வாங்குவேன்!” என்பாள்.

சில சமயங்களில் இந்த மாதிரி பெருமை பீற்றிக்கொள்வதில் நமக்கு உள்ள ஆர்வம் ஆபத்தான அளவு, அபத்தமானஅளவுகடந்துபோய் விடுவ துண்டு.ராதாவின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.

அவள் ‘அப்பர் மிடில் க்ளாஸ்’ சமூகத்தைச் சேர்ந்தவள் கொல்கத்தாவிலிருந்த ஒரு பிரபல ’லேடீஸ் க்ளப்’பில் உறுப்பினராக இருந்தாள். ஒரு நாள் அந்த ’கிளப்’ இல் பழைய புகழ் பெற்ற திரைப்படம் ’ஸிங்கிங் இன் தி ரேய்ன்’ காண்பிக்கப்பட்டது.

படம் முடிந்த பிறகு அங்கிருந்த பெண்கள் தங்களுடைய கணவர்களின் பொழுதுபோக்குகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ராதாவின் நெருங்கிய தோழியான ரேகா இவ்வாறு கூறினாள்: “ஹோ, சுரேஷ் மிக அழகாகச் சிறந்த மேலைநாட்டு நடனம் ஆடுவார். தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் மிகவும் ஆர்வமாக கடுமையாகப் பயிற்சி செய்வார். மெதுவாகஆடும் நடனவகைகள், வேகமாக ஆடும் நடனவகைகள் இரண்டு வகைகளையுமே கடுமையாகப் பயிற்சி செய்வார். அவர் ஆடுவதைப் பார்த்தால் எனக்கு எல்விஸ், ஃப்ரெட் ஆஸ்ட்டேய்ர்தான் எனக்கு நினவுக்கு வருவார்கள்!” என்று ராதாவின் பக்கமாகத் திரும்பி சவால் விடுவதாய்க் கூறினாள்.

ராதாவா தோல்வியைத் தழுவுவாள்... கொஞ்சங்கூட யோசிக்காமல், “ ”ரமேஷ் சிறந்த பரதநாட்டியக்கலைஞர்! ஷம்போ, ஸ்வயம்போ’ பாட்டிற்கு எத்தனை அற்புதமாக ஆடுவார் தெரியுமா! என்று பீற்றிக்கொண்டாள்.

ராதா சொல்வது பொய் என்று ரேகாவுக்குத் தெரியும். ’இந்த ராதாவின் பொய்யை அம்பலமாக்கியே தீரவேண்டும்’ என்று முடிவு செய்தவளாய், “அட! அப்படியா! எனக்கு பரதநாட்டியம் என்றால் உயிர் தெரியுமா! அதில் கண், கை, கால் எல்லாம் எத்தனை அருமையான ஒத்திசைவுடன் இயங்கும்! நன்றாக பரதநாட்டியம் ஆடக்கூடியவர்கள் ஆடும்போது பார்க்க அத்தனை ஆனந்தமாக இருக்கும்! ஒருநாள் நான் உன்னுடைய வீட்டிற்கு வந்து ரமேஷ் ஆடுவதைப் பார்க்க விரும்புகிறேன்! எப்படி அந்த அங்கங்களின் ஒத்திசைவை அவர் கொண்டுவருகிறார் என்று பார்க்கவேண்டும்! நான் பின்னர் உன்னைத் தொடர்புகொண்டு உனக்கு சௌகரியமான நாள் ஒன்றில் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்!”

ராதா அப்படியே உறைந்துபோனாள். தானே வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டுவிட்டது அவளுக்குப் புரிந்தது. ’இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது.... கடவுளே, என்னை எப்படியாவது காப்பாற்று....’

’கிளப்’பிலிருந்து நேரே ஒரு இசை ஒலிநாடா, வீடியோ விற்கும் கடைக்குச் சென்றாள். பரதநாட்டியம் கற்க ஆரம்பிப்போருக்கு உரிய வீடியோக்களை வாங்கிக்கொண்டாள்.

வீட்டிற்குச் சென்றவள் ரமேஷை எப்படியாவது, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ளச் செய்து விட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள். தேவைப் பட்டால் ஒரு நடன ஆசிரியரைக் கூட நியமித்துக்கொள்ளலாம்... ’ஆனால், முதலில் ரமேஷை ’தாஜா’ செய்ய வேண்டும்....’ அதற்கு அவனுக்குப் பிடித்த உணவுவகைகளை சமைத்துத் தருவதே சிறந்த வழி என்று அவளுக்குத் தெரியும். எனவே, அவன் விரும்பிச் சாப்பிடும் பால் பாயசத்தைத் தயாரித் தாள்.

சாப்பாட்டுமேஜையில் தனக்குப் பிடித்தமான பால் பாயசம் இருப்பதைப் பார்த்து ரமேஷுக்கு இனிமையான ஆச்சரியம்! “ராதா, இன்று என்ன விசேஷம்? பால் பாயசம் தயாரித்திருக்கிறாயே. இன்று என்னுடைய பிறந்த நாள் கிடையாதே?” என்றான். “எனக்குத் தெரியும் ரமேஷ், சும்மா, வழக்கமாகச் சாப்பிடுவதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட் டுமே என்று செய்தேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

”மிகவும் பிடித்திருக்கிறது என் அருமை மனைவியே!” என்றான் ரமேஷ்.

சாப்பாட்டுக்குப் பிறகு, ரமேஷ் நாட்டுநடப்புகளை அறியவேண்டி டி.வியை ‘ஆன்’ செய்தான்.  அதில் பரதநாட்டியம் கற்பித்தல் வீடியோ கண்டது. அதைப் பார்த்து ”ராதா” என்று, சமையலறையில்ருந்த தன் மனைவிக்குக் கேட்கும்படியாக உரத்த குரலில் அழைத்தான் அவன்.

பரதநாட்டியம் கற்றுக்கொள்ளப் போகிறாயா என்ன! அல்லது சுமதிக் காக (அவர்களுடைய மகள்) வாங்கிவந்திருக்கிறாயா என்ன?” என்று கேட்டான்.

”இல்லை, இல்லை ரமேஷ்” என்று கூறியபடியே சமையலறையிலிருந்து வரவேற்பறைக்கு வந்துசேர்ந்தாள் ராதா. “ ஆனால், அன்புக் கணவரே, இது உங்களுக்காக வாங்கியது!” என்று ஒருவழியாகச் சொல்லிவிட் டாள்.

“என்னது! எனக்காகவா? என்ன, விளையாடுகிறாயா ராதா?’ என்று கேட்டான் ரமேஷ்.

“இல்லை, அன்பே இல்லை” என்றாள் ராதா, “ஆனால் நீங்கள் எனக்கு அவசியம் உதவிசெய்யவேண்டும்...செய்வேன் என்று சத்தியம் செய்யுங் கள்”

“நான் செய்வேன், ஆனால், அதற்காக சத்தியமெல்லாம் செய்ய மாட் டேன்,  சொல்லு, என்ன விஷயம்?” என்று கேட்டான் ரமேஷ்.

பின், ராதா எல்லாவற்றிற்கும் ரேகா தான் காரணம் என்று கூறி நடந்ததை விவரமாக எடுத்துக்கூறினாள். “அவள் இன்று ‘க்ளப்’இல் எப்படி பீற்றிக்கொண்டாள் தெரியுமா? அவளுடைய கணவர் சுரேஷ் அத்தனை சிறப்பாக மேலையநாட்டு நடனங்களை ஆடுவாராம்... எனவே, நீங்கள் தன்னிகரற்ற பரதநாட்டியக் கலைஞர் என்று நான் சொல்லும்படியாகியது...” 


அதைக் கேட்ட ரமேஷ் இவ்வாறு பதிலளித்தான்: “ சரி, இந்த இக்கட்டி லிருந்து நீ விடுபட நான் உதவி செய்கிறேன். ஆனால், கீழ்க்கண்ட நிபந்தனைகளை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலில், உன்னுடைய தோழிகளிடம் நீ பேசும் பேச்சில் என்னை நுழைக்கக் கூடாது/”

“சரி, சரி” என்றாள் ராதா.


”அடுத்தது, இனி வாரம் ஒருமுறையாவது நீ பாயசம் செய்யவேண்டும்!”

“நிச்சயம் செய்கிறேன், நிச்சயம் செய்கிறேன்”, என்று பதிலளித்தாள் ராதா.

“இறுதியாக, ஆனால் இதுவும் மிக முக்கியம், இந்த விடுமுறையின்போது நாம் என்னுடைய பெற்றோர்களின் இடத்திற்குச் செல்லவேண்டும்.”

“என்னது?” என்று கோபமாகக் கேட்டாள் ராதா. “ஆனால், நாம் என்னு டைய பெற்றோர்களிடம் போகலாம் என்று நீங்கள் வாக்குறுதி அளித் திருக்கிறீர்கள்.”

“நான் உனக்கு உதவி செய்ய வேண்டுமா, வேண்டாமா?” என்று கேட்டான் ரமேஷ். “தவிர, அந்த சமயத்தில் ஒரு வார காலம் நான் அயல்நாடு போக வேண்டிவரலாம். அந்த சமயத்தில் நீ உன்னுடைய பெற்றோர்களிடம் போகலாம்”.

”சரி, அப்படியானால் சரி, நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றாள் ராதா.

“சரி, இப்பொழுது அமைதியாக இரு பதற்றம் வேண்டாம், சரியா” என்றான் ரமேஷ்.


சில நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் ரமேஷ் சுரஷை அவனுடைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் அழைத்தான்.

“ஹலோ சுரேஷ், நான் தான் ரமேஷ் பேசுகிறேன்.”

”தெரிகிறது, “என்ற  சுரேஷ், “நலமாக இருக்கிறாயா?” என்று விசாரித் தான்.

“நான் நலமாக இருக்கிறேன், ஆனால், ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் - நீ எல்விஸ் ஐ விட சிறப்பாக Jailhouse Rock' பாடலுக்கு நடனம் ஆடுவாயாமே!”

என்ன உளறுகிறாய்? பைத்தியம் கிய்த்தியம் பிடித்துவிட்டதா? அல்லது இத்தனை சீக்கிரமே ‘ஒரு கோப்பை’ உள்ளே இறங்கியாகிவிட்டதா?

இல்லை, இல்லை” என்று மறுத்தான் ரமேஷ். “யாராலும் உன்னளவு அற்புதமாய் Blue Danube ஐ ஆடமுடியாதாமே! கேள்விப்பட்டேன்!”

“யார் இந்த மாதிரி அபத்தமாக உன்னிடம் உளறிக்கொண்டிருக்கிறார் கள்? என்று கேட்டான் சுரேஷ்.

ரமேஷ் ராதாவுக்கும் ரேகாவுக்கும் நடந்த உரையாடல் விவரங்களை சுரேஷுக்கு எடுத்துரைத்தான்.

அவர்களிருவருமாக இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைப்பதற்கு ஒரு திட்டம் வகுத்தார்கள்.


ரு ஞாயிற்றுக்கிழமை, ராதாவுக்கு ரேகாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. “நான் இன்றைக்கு அந்தப் பக்கமாக வரவேண்டியிருக் கிறது. எனவே, உன் கணவர் ரமேஷ் பரதநாட்டியம் ஆடுவதைப் பார்க்க உன் வீட்டுக்கு வந்தாலும் வருவேன்!” என்றாள் ரேகா.

யார் அழைப்பது? என்று கேட்டான் ரமேஷ்.

“எல்லாம் அந்தத் தொல்லைப்பிடித்த ரேகா தான்” என்று கிசுகிசுப்பாய்க் கூறினாள் ராதா. ”அவள் இன்று நம் வீட்டுக்கு வரப்போகிறாளாம்...நாம் இப்போது என்ன செய்வது?”

”வரட்டுமே! ஒரு பிரச்னையும் இல்லை!” என்றான் ரமேஷ்.


சுரேஷும் ரேகாவும், சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார்கள். ராதா பீதியும், பதற்றமுமாய், அவர்களை வரவேற்றாள். 

சீக்கிரமே அவர்களுடைய உரையாடல் பொழுதுபோக்குகள், கணவர்கள் என்று திரும்பியது. தனக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்று எண்ணிய வளாய் ராதா காபி எடுத்துவருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து நழுவப் பார்த்தாள். ஆனால், ரமேஷ் அவளைப் போக விடவில்லை.

பின், ரேகா சொன்னாள்: “ரமேஷ், நீங்கள் மிகவும் நன்றாக பரதநாட்டியம் ஆடுவீர்களாமே! சுரேஷ் ஒரேயடியாகப் பாராட்டுகிறார்! அவர் அந்த வீடியோவைக் காட்டினார். உங்களுடைய கை, கால்,கண் எத்தனை அருமையாக ஒத்திசைவோடு இயங்குகின்றன! உண்மையிலேயே நீங்கள் ஒரு தன்னிகரற்ற நடனக்கலைஞர்தான்!”

”அந்த வீடியோவைப் பார்த்து என்னால் நிறையக் கற்றுக்கொள்ள முடியும், ஹோ, அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்!” என்று பதிலளித்தவாறே சுரேஷைப் பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகைத்தான் ரரேஷ். “இன்னொரு விஷயம் தெரியுமா? கல்லூரி நாட்களில் சுரேஷ் ஆடியதை நான் பார்த்திருக்கிறேன்....Jailhouse Rockக்கு அவன் ஆடியது இருக்கிறதே - அற்புதமாயிருந்தது!  எல்விஸ் இவனுடைய கால்தூசுக்கு வரமாட்டான்!”


பின்னர், அவர்கள் போன பிறகு ராதா ரமேஷிடம் குழப்பத்தோடு கேட்டாள்: “ஆச்சரியமாயிருக்கிறதே! ரேகா ஏதோ உங்களுடைய பரதநாட்டியம் வீடியோவைப் பார்த்ததாகக் குறிப்பிட்டாளே..... எனக்குப் புரியவேயில்லை....”

”எனக்கும் தான் புரியவில்லை!” என்றான் ரமேஷ். ”நீ ரேகாவிடன் கேட்டுப் பாரேன்!”








ஜி.வெங்கடேஷ்



1 comment:

  1. Sir,

    At one glance this piece might appear as laughing at the expense of ladies, but, in fact this highlights the social malady of our crazy craving for one-upmanship widely prevalent in our midst. your sense of humour and flair for writing are really enjoyable. latha.r

    ReplyDelete